நிதாரி கொலை வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
2006ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் ஏற்பட்ட அதிர்ச்சி அளிக்கும் நிதாரி கொலைத் தொடர் வழக்கில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் உ.பி. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நொய்டாவின் 31-வது செக்டாரில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்த ஏழை மக்களின் குழந்தைகள் தொடர்ச்சியாக காணாமல் போன சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலை ஏற்படுத்தியது. குறிப்பாக அக்டோபர் 2006-ல் பாயல் என்ற இளம்பெண் காணாமல் போனதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாயலின் கைப்பேசி ஒரு ரிக்ஷா ஓட்டுநரிடம் இருந்து போலீசாரிடம் சிக்கியதன் வழியாக டி-5 பங்களாவின் வேலைக்காரன் சுரேந்தர் கோலி கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் பின்னர் டிசம்பர் 2006-ல் பங்களா மற்றும் அருகிலுள்ள கால்வாயில் தோண்டப்பட்ட போது பல சடலங்கள், எலும்புகள், மண்டை ஓடுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இதையடுத்து பங்களா உரிமையாளர் மொஹீந்தர் சிங் புந்தேர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மொத்தமாக 29 கொலைகள் (10 பெண்கள், 19 குழந்தைகள்) தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையின் போது, கோலி ஒரு மனநோயாளி எனவும், கொலை செய்யப்பட்ட உடல்களுடன் தவறான உறவிலும் ஈடுபட்டதாகவும், புந்தேர் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ தெரிவித்தது. இதனையடுத்து ஜூலை 2007-ல் இருவருக்கும் காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.
ஆனால், மேல்முறையீட்டு வழக்கில் 2023 அக்டோபரில் உ.பி.யின் அலகாபாத் உயர்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்துடன் இருவரையும் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ மற்றும் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
இதன் விளைவாக மொஹீந்தர் சிங் புந்தேர் அனைத்து வழக்குகளிலும் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார். சுரேந்தர் கோலி, இன்னும் மற்றொரு வழக்கில் சிறையில் தொடர்கிறார்.
இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் சிபிஐ மற்றும் மாநில போலீசார் மேற்கொண்ட புலனாய்வுகளின் தரத்தைப் பற்றியும் உச்சநீதிமன்றம் கேள்விகள் எழுப்பியுள்ளது. நிதாரி பங்களாவில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள், எலும்புகளுக்கு எதிர்படக்கூடிய குற்றவாளிகள் யாரென்பது இன்னும் தெளிவாகாத நிலையை உருவாக்கியுள்ளது.