ரகசிய சுரங்கங்களில் நீரை வழிமாற்றி தீவிரவாதிகளின் தப்பிப்பு தடுக்கப்பட்டது
எல்லை கட்டுப்பாட்டு கோட்டைப் பகுதியில் இருந்து தப்பிச் செல்வதற்காக பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து, அதில் தண்ணீரை செலுத்தி முற்றாக மூடியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் புகுந்துவிடுவதைத் தடுத்து நிறுத்தியதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்துத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் போது மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் சுலைமான் என அழைக்கப்படும் ஃபைசல், ஹம்சா அப்ஹான் மற்றும் ஜிப்ரான் என்பவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இந்த மூவரும் பஹல்காம் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதாக உறுதிப்படுத்தும் பணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சண்டிகர் தடயவியல் ஆய்வகத்துடன் நேரடி தொடர்பில் இருந்தார். குற்றவியல் ஆதாரங்கள் உறுதிப்பட்டதன் பின்னர் தான் அவர் இந்த தகவலை நாடாளுமன்றத்தில் அறிவித்ததாக NIA வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சண்டிகர் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் இருந்து சுடப்பட்ட தோட்டாக்கள் மற்றும் ஏப்ரல் 22 அன்று பைசரன் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட வெறும் தோட்டாக்கள் ஒன்றே என்பதை பகுப்பாய்வில் தெரிய வந்தது.
மேலும், இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் எல்லை வழியாக தப்பிக்க திட்டமிட்டிருந்த இரகசிய சுரங்கங்களைத் துல்லியமாக கண்டறிந்தனர். பின்னர் அந்த சுரங்கங்களில் பள்ளங்கள் தோண்டி, வெள்ள நீர் செல்லும் வகையில் வழிமாற்றம் செய்தனர். இதனால், பாகிஸ்தான் பகுதி நோக்கித் தப்பிச் செல்ல அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து நடந்த மோதலில் அவர்கள் சந்தித்தும், சுட்டுக்கொல்லப்பட்டதாக NIA வட்டாரங்கள் தெரிவித்தன.