பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓவை பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர்
இந்தியாவின் பாதுகாப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரளய் ஏவுகணையின் சோதனை சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரையில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகள் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகள், ஏவுகணையின் குறைந்த மற்றும் அதிக தூரத்துக்கான தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனைகளில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாக அடித்து அழித்ததன் மூலம், எல்லா நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த சோதனை முழுமையாக வெற்றியாக அமைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரளய் என்பது இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட திட எரிபொருள் கொண்டு இயங்கும் குவாசி-பாலிஸ்டிக் வகை ஏவுகணையாகும். இது பல்வேறு வகையான ஆயுதங்களை ஏற்றி, பல இடங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சோதனையை சிறப்பாக முடித்த டிஆர்டிஓ அமைப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். மேலும், இந்த ஏவுகணை, எதிரிகளால் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு வலிமை சேர்க்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.