பஹல்காமில் தாக்கியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்பதை உறுதிப்படுத்தினார் அமித் ஷா – நாடாளுமன்றத்தில் தெளிவான விளக்கம்

0

பஹல்காமில் தாக்கியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்பதை உறுதிப்படுத்தினார் அமித் ஷா – நாடாளுமன்றத்தில் தெளிவான விளக்கம்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசிடம் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிவித்தார்.

நேற்று மக்களவையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் பேசிய அமித் ஷா, கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்திய இராணுவம், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசின் கூட்டுப்பணியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறினார்.

இந்த நடவடிக்கை ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் சுலைமான் அக்கா பைசல், அப்ஹான், ஜிப்ரான் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இதில் சுலைமான் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்ததாகவும், மற்ற இருவரும் அதே இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்யும் பல சான்றுகள் அரசிடம் உள்ளன என்றும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் இருவரிடமிருந்து பாகிஸ்தான் வாக்களர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அமித் ஷா கூறினார். அவர்களிடம் இருந்த சில சாக்லேட்டுகள் கூட பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முயன்றபோது, அந்தச் செயல்திட்டத்தை பிரதமர் நேரு ஒருதலைப்பட்சமாக நிறுத்தினார் என்பதுதான் இன்றைய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு காரணம் என்று அமித் ஷா விமர்சித்தார்.

‘பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளனவா?’ என காங்கிரஸின் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்வியை எதிர்க்கும் வகையில், “அவர் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதால் என்ன நன்மை கிடைக்கும்?” என அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோதும், அரசு மௌனம் காத்ததாகவும், ஆனால் தற்போது மோடி தலைமையிலான அரசு நாட்டை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் எதிர்க்கட்சிகளை மகிழ்ச்சியடையச் செய்யுமென எதிர்பார்த்ததற்குப் பதிலாக அவர்கள் எந்த உணர்வும் வெளிப்படுத்தாதது கவலையளிப்பதாகவும், இது என்ன வகையான அரசியல் என்பதை உணரமுடியவில்லை என்றும் அமித் ஷா விமர்சித்தார்.