இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது..!

0

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது..!

புவி கண்காணிப்பு நோக்கில், நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) இணைந்து, பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க உருவாக்கியுள்ள நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோளுக்கான திட்ட மதிப்பு ரூ.12,000 கோடி ஆகும்.

பலமுறை சோதனை செயல்முறைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட்டின் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது. ஏவுதலை ஒட்டியுள்ள 27 மணி நேரம் மற்றும் 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இப்போது இறுதிக்கட்ட வேலைகளாக எரிபொருள் நிரப்பும் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 743 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இது புவி கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட மிகவும் நவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் மொத்த எடை 2,392 கிலோகிராம் ஆகும், மேலும் இதன் பணிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். இந்த செயற்கைக்கோளின் மூலம் புவியின் சூழல் அமைப்புகள், காலநிலை மாறுபாடுகள், இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

புவியின் மேற்பரப்பில் ஏற்படும் மிக நுணுக்கமான மாற்றங்களையும் இந்த செயற்கைக்கோள் கண்டறியக்கூடிய திறன் கொண்டது. நிசார் செயற்கைக்கோள் 12 நாட்கள் ஓரமுறை பூமியைச் சுற்றி, அனைத்து வெப்பநிலைகளிலும் – பகலும் இரவும் – உயர்துல்லியமான தரவுகள் மற்றும் மிகத் தெளிவான படங்களை வழங்கும். இதற்காக, எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் வகை சிந்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள் வழங்கும் தரவுகளை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.