சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மொத்தம் 297 கல்வெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் தெரிவித்தார்.
இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் முழுமையாக நகலெடுக்கப்பட்டு, தனித்தனி நூலாக வெளியிடப்படுமா? என்பதற்கான கேள்விகளை விசிக எம்.பி. துரை.ரவிக்குமார் எழுப்பியிருந்தார். அதன் பதிலாகக் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்ததாவது:
“இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கல்வெட்டுப் பிரிவு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் இருந்து மொத்தம் 297 கல்வெட்டுகளை நகலெடுத்துள்ளது. இந்த கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலமான 1036 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை முதல் பல்வேறு பருவங்களைச் சேர்ந்தவை.
இந்த கல்வெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே படியெடுக்கப்பட்டு, அவற்றின் சுருக்கம் 1888-ல் இருந்து 1963-ம் ஆண்டு வரை வெளியாகிய இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளன. இதுவரை 157 கல்வெட்டுகளின் முழுமையான எழுத்து வடிவம் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெளியீடுகள் அனைத்தும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கல்வெட்டுப் பிரிவின் விற்பனை மையங்களில் கிடைக்கின்றன.”
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு துரை.ரவிக்குமார் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:
“சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இன்றும் முழுமையாக நகலெடுக்கப்படவில்லை. ஏற்கனவே நகலெடுக்கப்பட்ட கல்வெட்டுகளும் முழுமையாக பிரசுரிக்கப்படவில்லை. சோழர், பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசின் ஆட்சி கால வரலாற்றை பதிவுசெய்யும் கல்வெட்டுகள் அங்கு உள்ளன. தமிழில் மட்டுமல்லாது, சமஸ்கிருத மொழியிலும் கல்வெட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வெட்டுகள் நடராஜர் கோயிலின் வரலாறையும், கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழக வரலாறையும் புரிந்து கொள்ள முக்கியத்துவம் வாய்ந்தவை. மத்திய கலாச்சாரத்துறை தற்போது இப்பணியை முறையாக முன்னெடுக்க விருப்பம் காட்டவில்லை என்பதே அமைச்சர் பதிலில் இருந்து தெரிய வருகிறது.
எனவே, இந்த பணியை தமிழக அரசின் கல்வெட்டியல் துறை சார்பில் விரைவில் மேற்கொள்ளும்படி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டுக்கொள்கிறேன்.”
என தெரிவித்தார்.