ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் ஆய்வு நிறைவு: கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்

ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் ஆய்வு நிறைவு: கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்

அகமதாபாத் விமான விபத்திற்குப் பிறகு, ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு நாடாளுமன்றத்தில் மூன்று கேள்விகளை முன்வைத்திருந்தார். அவை:

  1. இந்தியாவில் உள்ள விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லையா?
  2. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பாதுகாப்பு சோதனைகளில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா?
  3. விமான விபத்துகளுக்கான முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய ஏர் இந்தியாவுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதா? மேலும், பாதுகாப்பு ஆய்வுகளின் விவரங்களை சமர்ப்பிக்க ஏர் இந்தியாவுக்கு அரசு உத்தரவிட்டதா?

இந்த கேள்விகளுக்கான பதிலில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் எழுத்துப் மூலம் கூறியதாவது:

“விமானங்கள் மற்றும் விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள் அனைத்தும், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் செயல்படுவதற்கான கண்காணிப்பு பொறுப்பு DGCA-வுக்கு இருக்கிறது. வழமையாகவும், அவ்வப்போது தணிக்கை, நேரடி ஆய்வு, இரவு நேர கண்காணிப்பு, பராமரிப்பு நடைமுறைகள் போன்றவை அனைத்து விமான நிறுவனங்களிடமும் மேற்கொள்ளப்படுகின்றன. DGCA ஆண்டுதோறும் தங்களது கண்காணிப்பு திட்டத்தை இணையதளத்தில் வெளியிடுகிறது. ஒவ்வொரு பிராந்தியக் கண்காணிப்பாளரும் தங்களுக்கான பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்கின்றனர்,” என்றார்.

ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணங்களை கண்டறிய விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரல், 2017 விதி 11-ன் கீழ் விசாரணையை உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து ஜூன் 13-ஆம் தேதி, ஏர் இந்தியாவுக்கு சொந்தமான அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படும் வகையில் DGCA அறிவுறுத்தியது. இதன் கீழ், ஏர் இந்தியாவிடம் உள்ள மொத்த 33 போயிங் விமானங்களில், தற்போது செயல்பாட்டிலுள்ள 31 விமானங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 8 விமானங்களில் சின்னதாக சரிசெய்ய வேண்டிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை சரி செய்யப்பட்ட பிறகு விமானங்கள் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டன. மீதமுள்ள 2 விமானங்கள் திட்டமிட்ட பராமரிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன