உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் மறைத்து பூசாரியாக இருந்த முஸ்லிம் ஒருவர் பிடிப்பு
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்ற கிராமத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ‘கிருஷ்ணா’ என்ற பெயரில் ஒரு இளைஞர் கடந்த ஒரு வருடமாக பூசாரி பணியை மேற்கொண்டுவந்தார். கோவிலிலேயே தங்கி இருந்த அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கிராம மக்கள் கவனம் செலுத்த தொடங்கினர். அதே நேரத்தில், கோயிலில் உள்ள உண்டியலில் பணம் குறைவடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவரது ஆதார் அட்டையை பார்த்தபோது, அவர் கிருஷ்ணா அல்லாமல் காசீம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காசீம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தின் சீதாமடி மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாப் என்பவரின் மகன் என உறுதியாகியது.
இந்தச் சம்பவம் கோயிலின் தூய்மையை பாதித்ததாகக் கருதிய அகில இந்திய இந்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சச்சின் சிரோஹி, தனது அணியுடன் சேர்ந்து கோயிலில் புனித கங்கை நீர் மற்றும் பால் ஊற்றி சுத்திகரித்தார்.
இதுபற்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் பேசிய சச்சின் சிரோஹி கூறியதாவது: “காசீம், அந்த ஊரில் உள்ள இளம் பெண்களுடன் நட்பு வளர்க்க முயற்சித்துள்ளார். இதன் மூலம் அவர் லவ் ஜிஹாத் செய்ய திட்டமிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் பண்டிதர்களின் அடையாளங்களை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இதைப் போலவே, 2023ஆம் ஆண்டு மீரட்டில் உள்ள சனி பகவான் கோயிலிலும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, ‘குர்ஜர்நாத்’ என்ற பெயரில் ஒருவர் பூசாரியாக இருந்தார். 6 மாதங்கள் கழித்து அவர் உண்மையில் குர்ஜர்நாத் அல்லாமல் குல்லு இஸ்மாயில் கான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.