இந்த ஆண்டில் 12 ராக்கெட்கள் ஏவப்படும் திட்டம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
இந்தாண்டில் மொத்தம் 12 ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெற்ற என்.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NISAR) செயற்கைக்கோளை ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இது GSLV-F16 தொடரில் 18-வது ராக்கெட்டாகும். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்கங்கள், புயல்கள், கனமழை போன்ற இயற்கை பேரழிவுகளை முற்றிலும் துல்லியமாக கணிக்க உதவும்.
இஸ்ரோ இந்த ஆண்டுக்குள் 12 ராக்கெட்கள் விண்ணில் செலுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. அதில், மனிதர்கள் இல்லாத ‘ககன்யான் ஜி-1’ செயற்கைக்கோளை டிசம்பர் மாதத்தில் ரோபோவுடன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ‘ககன்யான்’ திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு இந்திய விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பி, அங்கே பாதுகாப்பாக வைத்த பிறகு, மீண்டும் பிழையின்றி பூமிக்கே கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான ஆய்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன.
விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியாவின் பங்கு உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பும் திறமை இந்திய விஞ்ஞானிகளுக்கு உண்டு. விஞ்ஞானி அப்துல் கலாம் தெரிவித்ததுபோலவே, இந்தியா இன்று உலகில் 2-வது மிக முக்கிய விண்வெளி சாதனைசெய்த நாடாக திகழ்கிறது என்றார் நாராயணன்.