ஹைட்ரஜன் ரயில் பரிசோதனையில் வெற்றி: சென்னை ஐசிஎப்-இன் மைல்கல் சாதனை
பசுமை ரயில்கள் இயக்கத்துக்கான முயற்சிகளில், இந்திய ரயில்வே பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் ரயில் இன்ஜினை சோதனையாக இயக்கி, சென்னை ஐசிஎப் தொழிற்சாலை பெருமைக்குரிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.
இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “எக்ஸ்” தளத்தில் வெளியிட்ட பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், “இந்தியாவில் முதன்முறையாக, ஹைட்ரஜன் இயக்கத்தில் இயங்கக்கூடிய ரயிலின் சோதனை சென்னை ஐசிஎப்-இல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.
1,200 ஹார்ஸ் பவர் திறனை கொண்ட ஹைட்ரஜன் ரயில்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா தற்போது மேம்படுத்தி வருகிறது. இது, உலக அளவில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இந்தியாவின் இடத்தை உறுதி செய்யும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஜீரோ கார்பன் உமிழ்வை நோக்கிக் கொண்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தப் பிரகாரம், நாட்டின் முக்கிய போக்குவரத்து வசதியான ரயில்வேயில் ஹைட்ரஜன் இன்ஜின் பயன்பாட்டை உருவாக்குவது, அந்த இலக்கை விரைவாக அடைய வழிவகுக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2023-ல் மாநிலங்களவையில் உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், “பாரம்பரிய நகரங்களுக்கு ஹைட்ரஜன்” என்ற திட்டத்தின் கீழ், 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ரயிலும் சுமார் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு பாதைக்கும் சுமார் ரூ.70 கோடி செலவில் கட்டமைப்புகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.