பிஹாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு – நிதிஷ் குமாரின் அறிவிப்பு
பிஹார் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய தொகை ரூ.9,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதன் மூலம், முன்னதாக ரூ.6,000 வழங்கப்பட்ட மாத ஓய்வூதியம் இப்போது ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பத்திரிகையாளரின் மரணத்திற்கு பின்னர் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.3,000 இலிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் முதல்வர் நிதிஷ் குமார், “பிஹார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாதம் ரூ.6,000 வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தும் முடிவை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பத்திரிகையாளர் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.3,000 க்கு பதிலாக ரூ.10,000 மாதம் குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: “ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் ஒரு முக்கியக் களமாக உள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்கள். அவர்கள் பணியை நேர்மையாக செய்து முடித்து ஓய்வு பெற்ற பின்பு கண்ணியமாக வாழ்வதற்காகத்தான் இவ்வகையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 2025 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் சூழ்நிலையில், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை பெரிதளவில் உயர்த்தி, முதல்வர் நிதிஷ் குமார் தன்னிச்சையான கவனத்தை ஈர்த்துள்ளார்.