ட்ரோன் மூலம் வானிலிருந்து தரையிலுள்ள குறிக்கோள்களை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ
வானில் பறக்கும் ட்ரோன்களில் இருந்து தரை அடிப்படையிலான இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட யூஎல்பிஜிஎம் – V3 வகை ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை தயாரிப்புப் பணிகள் அதானி மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வகை ஏவுகணைக்கு V1, V2 மற்றும் V3 என மூன்று பதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் வழிகாட்டும் முறைகள், செயல் திறன்கள், தாக்கும் தூரம் போன்ற அம்சங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இந்த யூஎல்பிஜிஎம் – V3 ஏவுகணை கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற Aero India 2025 கண்காட்சியில் மக்களுக்குக் காண்பிக்கப்பட்டது. தற்போது, இந்த ஏவுகணையின் செயல் திறனை மதிப்பீடு செய்யும் வகையில், ஆந்திர மாநிலத்தின் கர்னூலில் அமைந்துள்ள திறந்தவெளி சோதனை மையத்தில் நேற்று DRDO அதன் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
12.5 கிலோகிராம் எடையுடைய இந்த ஏவுகணை, ட்ரோன் மூலம் வானில் எடுத்துச் சென்று, குறித்த இலக்கை நோக்கி செலுத்தப்படுகிறது. இந்த ஏவுகணை மூலம், பகல் நேரத்தில் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குறிக்கோளை தாக்க முடிகிறது. இரவில் இதே ஏவுகணை 2.5 கிலோமீட்டர் தூர இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. நேற்று நடைபெற்ற சோதனையில், இலக்கை நேர்த்தியாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு பின்னணியாக செயல்பட்ட டிஆர்டிஓ குழுவினருக்கும், ஏவுகணை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அவரது செய்தியில், “யூஎல்பிஜிஎம் – V3 ட்ரோன் ஏவுகணையின் சோதனை வெற்றியாக நிகழ்ந்தது, நம் நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேலும் மேம்படுத்தும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த முயற்சியில் பங்கேற்ற டிஆர்டிஓ, தொழிற்சாலைகள், குறு மற்றும் நடுத்தர தொழில்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு என் பாராட்டுகள். இந்த வெற்றி, இந்திய ராணுவ தொழில்நுட்ப முன்னேற்றத்தில், நாட்டின் உள்நாட்டு திறன்கள் சாத்தியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நிரூபிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
கர்னூலில் நடைபெற்ற இந்த ட்ரோன் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, ஆந்திர மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.