ராஜஸ்தானில் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 6 மாணவர்கள் உயிரிழப்பு, 32 பேர் காயம்
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசு இடைநிலைப் பள்ளியில், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்து, மேலும் 32 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதிக்கப்பட்ட பள்ளி தங்கிபுரா காவல் எல்லைக்குள் உள்ள பிப்லோட் கிராமத்தில் இயங்கிவருகிறது. அங்கு 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இன்று காலை வழக்கம்போல் பள்ளி ஆரம்பமாகி, மாணவர்கள் இறைவணக்கம் பாடிக் கொண்டிருந்த வேளையில், கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால், மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கிபுரா காவல்நிலைய அதிகாரி விஜேந்திர சிங் தெரிவித்ததாவது:
“ஆரம்பத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 2 மாணவர்களின் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் ஜலாவரில் உள்ள எஸ்ஆர்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காலையில் 7.45 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கான அறைகளின் மேற்கூரையே இடிந்தது.” என கூறினார்.
பின்னர், தீவிர காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இந்த பரிதாபத்துக்கு ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பதிலளிக்கையில்,
“பிப்லோட் பகுதியில் ஏற்பட்ட இந்த துயரமான விபத்தில், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் உடனடியாக வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்யும். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.” என கூறினார்.
முதல்வர் பஜன்லால் ஷர்மா, தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில்,
“பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த இந்த சோக சம்பவம் மனதை துளைக்கும் வலியை ஏற்படுத்துகிறது. காயமடைந்த மாணவர்கள் சிறந்த சிகிச்சை பெறுவதை உறுதிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் இழப்பை தாங்க இறைவன் வலிமை தர வேண்டும்.” என பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.