மத்திய அரசு நீதிபதிகள் நியமனத்தை தாமதிப்பது குறித்து மூத்த வழக்கறிஞர்களின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்யும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதே வழக்கம். இதன்படி, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் இடமாற்றங்களும் நடைபெறுகின்றன. ஆனால், கொலீஜியம் பரிந்துரைத்த அனைத்து பெயர்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல், சில பெயர்களை மட்டும் தேர்வு செய்து, மீதமுள்ளவர்களை நீண்ட காலமாக ஒப்புதல் இன்றி விட்டுவைக்கிறது. 2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட பலர் இன்னமும் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர்.
இந்த நிலைமைக்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி பி.ஆர். காவை மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கறிஞர் அரவிந்த் தாதர் வாதிடுகையில், “2019-ஆம் ஆண்டிலிருந்து கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியலில் உள்ள பல நபர்களுக்கு மத்திய அரசு இன்றுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் காலக்கெடுகளை வழங்கினாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் மத்திய அரசு கோரத் தாமதம் செய்கிறது. இதன் காரணமாக பணி மூப்பு இழப்பும், மனஉளைச்சலும் ஏற்படுவதால், டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த பல முக்கிய வழக்கறிஞர்கள், ஆர்வம் இழந்து, தங்கள் பெயர்களை பட்டியலிலிருந்து திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், 2023-ஆம் ஆண்டு நீதிபதிகள் நியமன தாமதம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணை பட்டியலில் இருந்து திடீரென அகற்றப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து கேள்வி எழுந்தபோது, அப்போதைய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “சில விஷயங்களைப் பற்றி எதுவும் பேசாமல் விடுவதே நல்லது” என பதிலளித்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடும்போது, “டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர், தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் முதல் தரம் பெற்று பட்டம் பெற்றவர். அவரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தபோதும், மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இப்படி, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தொடர்ந்து நடைபெறும் தாமதம் முறையீடாக உள்ளது” என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்ற அமர்வு ஒப்புதல் அளித்தது.