இங்கிலாந்துக்கு இனி 95% வேளாண் பொருட்கள் வரிவிலக்கு உடன் ஏற்றுமதி செய்ய முடியும்: பியூஷ் கோயல் தகவல்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்படும் 95% வேளாண் பொருட்களும், 99% கடல்சார் உணவுப் பொருட்களும் வரி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக உடன்படிக்கையான CETA ஒப்பந்தத்தில் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவுக்குக் கிடைக்கும் பலன்களைப் பற்றியுள்ள அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். இதைப் பற்றிய தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில், “இந்த உடன்படிக்கையின் கையெழுத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் இருநாட்டு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா இங்கிலாந்துக்கு செய்யும் ஏற்றுமதிகளில் 99% வரிவிலக்குடன் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உழைப்பு அடிப்படையிலான துறைகளுக்கு சுமார் 23 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை வாய்ப்புகள் உருவாகும். பாலின சமத்துவமும் உள்ளடக்கமான வளர்ச்சியும் கொண்ட புதிய காலத்தை இந்த ஒப்பந்தம் தொடங்கி வைக்கிறது.
ஜவுளி, தோல் உற்பத்தி, காலணிகள், ரத்தினங்கள், நகைகள், பொம்மைகள் மற்றும் கடல்சார் பொருட்கள் தொடர்பான சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் புதிய நலமுடனான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். கிராம தறிகள் முதல் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வரை உள்ள தொழில்களுக்கு நிதி உதவி கிடைக்கும். உலக சந்தை உற்பத்தி சங்கிலியில் பங்கேற்கும் வாய்ப்புகளும் விரிவடையும்.
இந்த ஒப்பந்தம் விவசாயத் துறைக்கே பெரும் வெற்றியாக அமையும். இந்தியா, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் வேளாண் பொருட்களில் 95% வரியில்லாமல் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுபோல, மீனவர்கள் 99% கடல்சார் உணவுப் பொருட்கள் வரிவிலக்குடன் அனுப்பி லாபம் பெற முடியும். இதன் மூலம், அவர்களின் வருமானம் மேம்படும்.
பொறியியல் சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ரசாயனங்கள், உணவு பதப்படுத்தல், பிளாஸ்டிக் உள்ளிட்ட உற்பத்தி துறைகளிலும் இந்த ஒப்பந்தம் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்திய நுகர்வோருக்கு தரமான பொருட்கள் போட்டி விலையில் கிடைக்க உதவும்.
தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறை மற்றும் கல்வி போன்ற உயர்தர பிரித்தானிய சந்தைகளை இந்தியர்கள் எளிதில் நுழைந்து பயன்பெற முடியும். சமையல் கலைஞர்கள், யோகா பயிற்றுநர்கள், இசை கலைஞர்கள் மற்றும் வணிகர்களும் பயனடைவார்கள்.
இந்த ஒப்பந்தம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிரிட்டன் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. இது அவர்களது உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்குத் தள்ளுவதாக அமையும். ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘வொக்கல் ஃபார் லோக்கல்’ இயக்கங்களுக்கு இது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
அதே சமயம், இது வேலை வாய்ப்புகளை பெரிதும் உருவாக்கி சமூகத்தையே முன்னேற்றும். இந்தியாவின் வணிகத் தலைமைத்துவத்தை வலுப்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பில் புதிய கட்டத்தை தொடக்கிறது. நம் இருதரப்பு வர்த்தக உறவை புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.