“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி யாதவ் கடும் எச்சரிக்கை

0

“எஸ்ஐஆர் நிறுத்தப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்” – தேஜஸ்வி யாதவ் கடும் எச்சரிக்கை

இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பீகாரில் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (Special Intensive Revision – எஸ்ஐஆர்) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்காது புறக்கணிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரித்துள்ளார்.

2024 ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. எந்தத் தகுதியற்ற நபரும் பட்டியலில் இடம் பெறக் கூடாது, அதேபோல் எந்தத் தகுதியுள்ள நபரின் பெயரும் தவற விடப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் தகுதியான ஓட்டாளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற சந்தேகத்தில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் எம்எல்ஏக்கள், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றனர். உள்ளேயும் வெளியேயும் தங்கள் போராட்டத்தை வலுப்படுத்தினார்கள்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய தேஜஸ்வி, “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் ஏராளமான தவறுகள் நடக்கின்றன. எஸ்ஐஆரை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், மகாகத்பந்தன் கூட்டணி தேர்தலை புறக்கணிக்க தயாராகவே உள்ளது. ஏற்கனவே யார் வெல்வார்கள் என்பது தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஒரு போர்முறை தேர்தலுக்கு என்ன அர்த்தம்?” எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர், “பூத் அளவிலான அதிகாரிகள், வாக்காளர்கள் தரவுகளுக்கு பதிலாக தாங்களே கையொப்பமிட்டுச் சமர்ப்பிக்கின்றனர். கணக்கெடுப்பு படிவங்கள் எதையும் மதிப்பில்லாத காகிதமாகவே பயன்படுத்துகின்றனர். இது குறித்து புகார் கூறும் ஊடகவியலாளர்களின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியின் கருவி போலவே செயல்படுகிறது” எனக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடந்ததா? என்ற கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி, “எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.