மும்பை வெடிகுண்டு வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்பின் அமலுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை

0

மும்பை வெடிகுண்டு வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்பின் அமலுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை

2006-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்ச்சியான ரயில் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாகக் கூறி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை விடுதலை செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் அமலுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2006 ஜூலை 11-ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் இடம்பெற்ற தொடர் வெடிவிபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். மேலும், 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேருக்கு 2015-ஆம் ஆண்டு மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், 5 பேருக்கு மரண தண்டனை, 7 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ததையடுத்து, மும்பை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்தது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி, அரசு தரப்பு தங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு தேவையான உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, 12 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மகாராஷ்டிர அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 22-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. மாநில அரசுக்காக ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோட்டீஷ்வர் சிங் ஆகியோர், துஷார் மேத்தாவின் வாதங்களை கேட்டுக்கொண்டனர். அவர், திட்டமிட்ட குற்றங்களை தடுக்க உருவாக்கப்பட்ட MCOCA சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணைகளுக்கு தடையாக இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு அமையும் எனக் கூறினார். எனவே, அதற்குத் தடை தேவை என்றார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், MCOCA வழக்குகள் விசாரிக்கப்படும் விசாரணை நீதிமன்றங்கள், இந்த தீர்ப்பை முன்னுதாரணமாகக் கருதக் கூடாது எனக் கூறினர். மேலும், விடுதலை செய்யப்பட்ட 12 பேரை மீண்டும் கைது செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்தும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினர்.