மசூதியில் ஆடை விதிமுறைகளை மீறியதாக டிம்பிள் யாதவ் மீது பாஜகவின் குற்றச்சாட்டு
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள ஒரு மசூதியில் நேற்று கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் அவரது மனைவி, பார்லிமெண்ட் உறுப்பினரான டிம்பிள் யாதவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் டிம்பிள் யாதவ் மசூதியின் பாரம்பரிய ஆடை ஒழுங்குகளை பின்பற்றாமல், முக்காடு இல்லாமல் சாதாரண சேலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பாஜகவின் சிறுபான்மையின மோர்ச்சா அமைப்பின் தேசிய தலைவர் ஜமால் சித்திக் கூறியதாவது,
“வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மேலும், டிம்பிள் யாதவ் மரியாதைக்குரிய ஆடை விதிகளை பின்பற்றாமல் இருந்தது முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல். இது மசூதி மரியாதையை பாதிப்பதுடன், சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.”
அத்துடன்,
“மசூதியின் இமாம் மொஹிபுல்லா நத்வி சமாஜ்வாதி கட்சி ஆதரவு வலியுறுத்துபவர் என்பதாலேயே இந்த கூட்டத்துக்கு அனுமதி அளித்ததாக தெரிகிறது. இது முற்றிலும் தவறானது. இந்த நிகழ்ச்சியையொட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.
மேலும்,
“சமாஜ்வாதிக்கு அனுமதி வழங்கப்பட்டதுபோல், நாங்களும் ஜூலை 25-ம் தேதி தொழுகைக்குப் பிறகு மசூதியில் கூட்டம் நடத்தி தேசிய கீதம் பாடுவோம்,” எனவும் அவர் சவால் விடுத்தார். “அகிலேஷ் யாதவ், முஸ்லிம் மத இடங்களை தன்வசமானவை என எண்ணுகிறார் போலிருக்கிறது,” என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த டிம்பிள் யாதவ்,
“மசூதிக்குள் எந்தக் கட்சி கூட்டமும் நடத்தப்படவில்லை. பாஜக இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து மக்களை தவறாக வழிநடத்த முயல்கிறது. ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களை மறைக்க இது ஒரு உத்தியாகும்,” என கூறினார்.
அதேபோல் அகிலேஷ் யாதவ் கூறும்போது,
“பாஜக, மக்கள் ஒருமித்தமாக இருக்க வேண்டாமென்று விரும்புகிறது. நாம் அனைத்து மதத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் பாஜக அரசியல் ஆயுதமாக மதத்தை பயன்படுத்துகிறது,” என்றார்.