உலகளாவிய பாதுகாப்பு தரவரிசை: இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியது
நம்பியோ எனும் தரவுத் தளம் வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில், இந்தியா வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை விட மேலிடத்தில் இடம்பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகுந்த பாதுகாப்புடைய நாடுகளின் தரவரிசையை நம்பியோ வெளியிடுகிறது. 2025-ம் ஆண்டுக்கான நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின் அடிப்படையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா, உலகின் மிகப் பாதுகாப்பான நாடாகத் தேர்வாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற மூன்று மத்திய கிழக்கு நாடுகளும் குறைந்த குற்றச்செயல்களின் விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு அமைப்புகளால், உலகின் முதல் ஐந்து பாதுகாப்பான நாடுகளில் இடம் பெற்றுள்ளன.
பாரம்பரியமாக பாதுகாப்பானதாகக் கருதப்படும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை விட, இந்தியா இந்த பட்டியலில் மேலே உள்ளது.
மொத்தம் 147 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசையில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடத்திலும், அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடத்திலும் உள்ளது.
தெற்காசிய நாடுகள் தரவரிசையில், சீனா 76 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளது. இலங்கை 59-வது இடத்தில், பாகிஸ்தான் 65-வது இடத்தில், வங்கதேசம் 126-வது இடத்தில் உள்ளன.
நம்பியோ தரவின் அடிப்படையில், அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.
மற்றொரு பக்கத்தில், பாதுகாப்பு தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது. பாதுகாப்பு குறைவான நாடுகளின் பட்டியலில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் முதன்மை 10 இடங்களை பிடித்துள்ளன.
பயனாளர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், நம்பியோ பாதுகாப்பு குறியீடு தயாரிக்கப்படுகிறது. குற்றச்செயல்கள், பொது பாதுகாப்பு குறித்த பார்வைகள், சமூகக் காவல் பணியில் உள்ள சிக்கல்கள், தனிப்பட்ட பாதுகாப்பு ஆபத்துகள் போன்ற பல காரியங்களை மதிப்பீட்டில் கொண்டு வந்து, பல்வேறு பகுதிகளின் பாதுகாப்பு நிலையை ஒப்பிடுவதற்கான கருவியாக இந்த குறியீடு செயல்படுகிறது.