இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30ல் விண்ணில் பாயும்!
பூமியின் மேற்பரப்பு மற்றும் சூழலியல் மாற்றங்களை கண்காணிக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய நவீன செயற்கைக்கோளான நிசார் (NISAR – NASA-ISRO Synthetic Aperture Radar), ஜூலை 30-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு 2014-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இஸ்ரோ மற்றும் நாசா இடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரு நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து சுமார் ₹12,000 கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோளின் உருவாக்கப் பணிகளை கடந்த ஆண்டு நிறைவு செய்தனர்.
பல கட்ட சோதனைகள் முடிந்ததையடுத்து, தற்போது ஸ்ரீஹரிகேட்டா விண்வெளி மையத்தின் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
நிசார் செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்:
- எடை: 2,392 கிலோ
- விண்வெளி பாதை: பூமியிலிருந்து 743 கி.மீ தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதை
- ஆயுட்காலம்: 3 முதல் 5 ஆண்டுகள்
- செயல்பாடு: பூமியின் மேற்பரப்பு மற்றும் பருவநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர் அபாயங்கள், சூழல் மாற்றங்கள் போன்றவற்றை கண்காணிக்கும்
இந்த செயற்கைக்கோளில் எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரு அலைவரிசைகளையும் ஒரே செயற்கைக்கோளில் இணைத்திருப்பது உலக அளவில் முதல் முறையாகும்.
நிசார் செயற்கைக்கோள், பூமியின் முழுப் பரப்பையும் 12 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக ஸ்கேன் செய்து, இரவும் பகலும் துணையின்றி, எந்தவொரு சீதோஷ்ண நிலையிலும் செயல்பட்டு, மிகத் துல்லியமான தரவுகளையும், உயர் தெளிவுள்ள படங்களையும் தரும்.
இவை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு திறந்தவையாக வழங்கப்படும். நிசார் அனுப்பும் தரவுகள், புவி மாற்றங்களை புரிந்து கொள்ளவும், சூழலியல் முடிவெடுப்புகளுக்காகவும் பெரிதும் உதவக்கூடியவையாக இருக்கும்.