‘Su From So’: கதையால் கலக்கும் கன்னட படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பயணம்!
கடந்த ஜூலை 25ம் தேதி, பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி திரையிடப்பட்ட கன்னட திரைப்படம் ‘Su From So’, தற்போது தனது கதையின் வலிமையால் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னட திரையுலகை தாண்டி, பான் இந்தியா அளவில் இந்த படத்தைப் பற்றிய பேசுதல் தற்போது நேர்மறையாக மாறியுள்ளது.
இதே மாதம் 18ம் தேதி வெளிவந்த இந்தி திரைப்படமான ‘சயாரா’ எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெற்றுவருகிறது. அதே நேரத்தில், தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பவன் கல்யாணின் ‘ஹர ஹர வீர மல்லு’ திரைப்படமும் கடந்த வாரம் வெளியானது. அதே வாரம் வெளியாகிய மற்றொரு படம் தான் ‘Su From So’.
இதை எழுதி, இயக்கி, நடித்தவர் புதிய இயக்குநர் ஜே.பி. துமிநாட். இது ஒரு ஹாரர் காமெடி வகையில் உருவாகிய படம். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படவில்லை. இருந்தாலும், படம் வெளிவந்தவுடன் அதன் கதைக்களம் பார்வையாளர்களை கவர்ந்தது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) அன்று ‘புக் மை ஷோ’ தளத்தில் மட்டும் சுமார் 1.77 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அன்று 550 காட்சிகள் ஹவுஸ்புல் என திரையரங்குகள் நிரம்பி நிரம்பிப் போனன. வாரத்தின் திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களிலும் வசூல் நன்றாகவே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக, கன்னட சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டியும் உள்ளார். மேலும், இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். “சமீப வரைக்கும் ‘Su From So’ எனும் படம் அதிகம் அறியப்படவில்லை. ஆனால் இன்று, உங்கள் ஆதரவினால் இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உங்கள் வார்த்தைகளே எங்களுக்கான விளம்பரமாக இருந்தன” என்று ராஜ் பி ஷெட்டி தெரிவித்துள்ளார்.