விரைவில் யூடியூபில் வெளியாகும் ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’
ஆமிர்கான் தயாரித்துள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் விரைவில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தை ரூ.100 செலுத்தி பார்வையிடலாம்.
ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான் மற்றும் ஜெனிலியா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படம், நேரடியாக ஓடிடி தளங்களில் வராது என்று முன்னதாகவே ஆமிர்கான் அறிவித்திருந்தார். தற்போது இந்தப் படத்தை யூடியூப் வாயிலாக வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்க வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்த புதிய நடைமுறை, சர்வதேச அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதுமையான முயற்சியாக கருதப்படுகிறது. ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை யூடியூப்பில் மட்டுமே காண முடியும். மற்ற எந்த ஓடிடி தளங்களிலும் இது கிடைக்காது. ஆகஸ்ட் 1 முதல், இந்த திரைப்படம் யூடியூப்பில் பணம் செலுத்தி காணக்கூடிய முறையில் வெளியாகிறது. இந்தியாவில் ரூ.100 கட்டணத்தில் இந்த படம் கிடைக்கிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 நாடுகளில், அந்தந்த நாட்டின் சந்தை நிலைக்கு ஏற்ப கட்டணத்தில் கிடைக்கும்.
இந்த முயற்சியைப் பற்றி ஆமிர்கான் கூறியதாவது: “கடந்த 15 ஆண்டுகளாக, திரையரங்குகளுக்கு வர முடியாத அல்லது வராத பார்வையாளர்களை எப்படி எட்டவேண்டும் என்பதற்கான சவாலுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறேன். தற்போது அதற்கான சரியான தருணம் வந்துவிட்டது.
நம் அரசாங்கம் யுபிஐ முறையை அறிமுகப்படுத்திய பிறகு, மின்னணு பரிவர்த்தனைகளில் இந்தியா உலக அளவில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவில் இணையம் விரைவாகப் பரவியுள்ளதால், பல சாதனங்களில் யூடியூப் பயன்படுத்தப்படுவதால், இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. சினிமா அனைவருக்கும் எளிதாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கவேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் படங்களை பார்ப்பதற்கான வசதி வேண்டும் என நினைக்கிறேன்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், நாட்டுக்குள் மற்றும் உலகளவில் நிலவும் எல்லைகளைத் தாண்டி, படைப்பாற்றல் மிக்க கதைகள் மக்களிடம் செல்லும். மேலும் இளைய இயக்குநர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இது அனைவருக்கும் சேரும் வெற்றியாக அமையும்” என்று தெரிவித்தார் ஆமிர்கான்.