மீண்டும் சேரும் ‘கூலி’ கூட்டணி!
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையிடப்படவுள்ள படம் ‘கூலி’. தற்போது அதன் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படம் முழுவதையும் பார்த்த ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜை பெரிதும் பாராட்டியதோடு, மீண்டும் இருவரும் இணைந்து வேலை செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து மிகுந்த உற்சாகம் அடைந்த லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்திற்காக புதிய கதை ஒன்றை தயார் செய்து வருவதாக கூறியிருக்கிறார்.
ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் அடுத்த படத்திற்கான பணிகள் எப்போது தொடங்கும், யார் தயாரிப்பாளர் என்ற விவரங்கள் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.
தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் லோகேஷ். அதன் பின் ‘கைதி 2’ மற்றும் ஆமிர்கான் நடிக்கும் புதிய படம் என பிஸியாக இருக்கிறார். இவை முடிந்த பிறகு தான் ரஜினிக்காக இயக்கவுள்ள படம் தொடங்கும் என தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவையும், அனிருத் இசையையும் செய்துள்ளனர்.