அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்!
நடிகர் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ‘டிராகன்’ திரைப்படம் மிகுந்த வெற்றி பெற்ற பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் எந்த புதிய படத்தையும் உருவாக்காமல் இருந்தது.
அந்நிறுவனம் அடுத்ததாக பல படங்களை உருவாக்க திட்டமிட்டிருந்தாலும், இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தை விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய திரைப்படத்தை, இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு உதவியாளராக பணியாற்றியவர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தக் கதையின் மையக் கரு, ஒரு தந்தை மற்றும் மகளுக்கிடையிலான உறவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதில் அர்ஜுன் இதுவரை பெற்றதிலேயே அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு அடுத்ததாக, ஏஜிஎஸ் நிறுவனம் சிம்பு நடிக்கும் 50வது படம், சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படம், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படம், சந்தானம் நடிக்கும் படம் என பல்வேறு திரைப்படங்களை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. இவை அனைத்தும் துவக்க நிலை பணிகளில் உள்ளன.