இந்தியாவில் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’ விளங்கியது. இந்தப் படம் இந்தியாவில் ஜூலை 4-ம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடியை கடந்து வசூலில் பலத்த சாதனைப் படைத்துள்ளது.
இந்தப் படத்திற்கு தொடர்ந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதற்குப் பின் வெளியான ‘சூப்பர் மேன்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பார்வையாளர்களை ஈர்க்க முடியாமல் தவறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிராட்பிட் நடித்த ‘எஃப் 1’ திரைப்படமும் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’ போல் இந்திய திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை எழுப்பி வருகிறது. குறிப்பாக ‘எஃப் 1’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழிகளில் வெளியான படங்கள் பெரிதாக வசூலில் ஓங்கவில்லை. தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்த நிலையில், ‘மாமன்’ திரைப்படத்துக்குப் பிறகு எந்த ஒரு தமிழ்படமும் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற முடியவில்லை.
இந்த சூழ்நிலையில், அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் மீதுதான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு திரையரங்கு வட்டாரத்தில் பரவலாக உள்ளது.