கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் – ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு – AthibAn Tv

0

கோவையில் 20,000 நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் – ‘நடவடிக்கை’க்கு தொழில் துறையினர் எதிர்ப்பு

2017 முதல் 2022 வரை ஜிஎஸ்டி வரி தாக்கலில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு, கோவை மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்தது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலிருந்து வசூலிக்கப்படும் வரி, மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி என பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதாக தொழில் துறையினர் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் புதிய பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்க (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் மற்றும் ‘டாக்ட்’ கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தெரிவித்ததாவது:

“ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து கணக்கு தாக்கல் செய்வது வரை, குறிப்பாக எம்எஸ்எம்இ துறைக்கு பல பிரச்சினைகள் உள்ளன. மத்திய, மாநில ஜிஎஸ்டி அலுவலகங்களுக்கு இதுகுறித்து கோரிக்கைகள் விடுத்து வந்துள்ளோம். ஆனால் சமீபத்தில், மாநில ஜிஎஸ்டி அலுவலகம் அவுட்சோர்ஸிங் முறையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் மூலம், 2017 முதல் 2022 வரை வரி தாக்கலில் தாமதம் மற்றும் பிற காரணங்களுக்காக அபராதம் விதித்தல் தொடர்பாக நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் கணக்குகளை தாக்கல் செய்து, 20ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும். 20ஆம் தேதிக்கு பின் தாமதித்தால், ஒரு நாளுக்கு ரூ.50 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுப்படி பொருட்களுக்கு பணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றாலும், நடைமுறையில் நிதி நெருக்கடி காரணமாகவே வரி செலுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலிருந்து 2022 வரை பழைய விவகாரங்களை கொண்டு அபராதம் விதிப்பது சரியானது அல்ல. தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களில், 20,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது எம்எஸ்எம்இ துறையை பாதிக்கும் நடவடிக்கையாகும்.

இந்த நிலை தொடர்ந்தால், ‘போசியா’ தொழில் அமைப்பின் சார்பில் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்நடவடிக்கையை நிறுத்தக் கோர முடிவு செய்துள்ளோம். தேவையெனில் போராட்டம் நடத்தும் திட்டத்தையும் பரிசீலித்து அறிவிப்போம்” என தெரிவித்தனர்.