வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்கள் தரைவழியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய தடை
இந்தியா-வங்கதேச உறவில் சற்று உறைவு குறைந்த நிலையில், வங்கதேசத்திலிருந்து தரைவழியாக சணல் பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், “வங்கதேசத்திலிருந்து கயிறு மற்றும் சணல் பொருட்களை தரை மார்க்க வழியாக இறக்குமதி செய்வதற்கான செயல்முறைக்கு உடனடி தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை பட்டியலில் சணல் சாக்குகள், சணல் கயிறு, பைபரால் நெய்த துணிகள் உள்ளிட்ட பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில், மகாராஷ்டிராவில் உள்ள நவ ஷேவா துறைமுகம் வழியாக மட்டுமே இந்த பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.
மேலும், கடந்த மே மாதம் வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் இறக்குமதி செய்ய துறைமுக கட்டுப்பாடுகள் இந்தியா விதித்திருந்தது.
இந்த தடை விதிப்புக்கு பின்னணி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுப்பதில் தோல்வியுற்றதைப் பின்னணியாகக் கொண்டது. இது இந்தியா-வங்கதேச உறவை பாதித்துள்ளது.
ஜவுளித் துறையில் வங்கதேசம் இந்தியாவுக்கு முக்கிய போட்டியாளராக உள்ளது. 2023-24 ஆண்டில் இந்தியா-வங்கதேச வர்த்தகம் 12.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்காக இருந்தது. 2024-25 ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 11.46 பில்லியன் டாலர், இறக்குமதி 2 பில்லியன் டாலர் என பதிவானது.