கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை தேட வேண்டும் – மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தல்

0

கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை தேட வேண்டும் – மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பை அறிவித்துள்ளதால், இது இந்திய கடல் உணவு ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை ஆராய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கூறியதாவது: “தற்போதைய சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்திய இறால் மற்றும் பல்வேறு மீன் வகைகள் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. எனவே புதிய சந்தைகளை பிடிப்பதில் தீவிரமாக செயல்பட வேண்டும்” என்றார்.

அமெரிக்காவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2015-ல் 24.4% இருந்த சந்தைப் பங்கு, 2024-ல் 40.6% ஆக உயர்ந்தது. ஆனால் அதிக வரி விதிப்பு, இந்தியாவின் சந்தைப் பங்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மத்திய அரசு, மாற்று சந்தைகளாக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை அடையாளம் கண்டு, மதிப்புக் கூட்டல், பதப்படுத்தல், பேக்கேஜிங் வசதிகளை மேம்படுத்த மீன்வள உட்கட்டமைப்பு நிதியை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவின் வருடாந்திர மீன் உற்பத்தி 2013-14-இல் 96 லட்சம் டன்னாக இருந்தது. 2024-25-இல் இது 195 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. 2023-24 நிதியாண்டில், ரூ.60,524 கோடி மதிப்புள்ள 17.81 லட்சம் மெட்ரிக் டன் கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.