பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆகஸ்ட் 15 முதல் அமல்

0

பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆகஸ்ட் 15 முதல் அமலில்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டம் 2019 ஆம் ஆண்டில் அறிமுகமானது. பின்னர் 2021 முதல் இது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பு குறைய, ஊழியர்களுடன் ஏற்படும் தகராறு மற்றும் சில்லறை பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டன.

சுங்கச் சாவடிகளில் பயணத்தை சுலபமாக்கவும், குறைந்த செலவில் பயணம் செய்யும் வசதி வழங்கவும் பாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இதன் படி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று பாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகமாகிறது. ரூ.3,000 செலுத்தி ஆண்டு சந்தா பெறலாம். இந்த சந்தா மூலம், ஒரு ஆண்டுக்குள் 200 முறை வரை சுங்கச் சாவடிகளை கடக்கலாம். இதில் முதலில் நிறைவடையும் அளவுக்கே சந்தா செல்லுபடியாகும்.

ஆண்டு சந்தா பெற ‘ராஜ்மார்க் யாத்ரா’ செயலி அல்லது NHAI/MoRTH இணையதளத்தில் வாகன எண், பாஸ்டேக் அடையாள அட்டையின் தகவல்களை பதிவு செய்து, யுபிஐ மூலம் ரூ.3,000 செலுத்த வேண்டும். அதன் பின்னர், சந்தா பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டதாக மொபைலில் குறுஞ்செய்தி வரும்.

சந்தா காலாவதியான பிறகு, தானாக புதுப்பிப்பு நடைபெறாது; மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்கள், அடிக்கடி சுங்கச் சாவடிகளை பயன்படுத்துவோருக்கு இந்த ஆண்டு சந்தா அதிக பயன் அளிக்கும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.