காலி மதுபாட்டில் திருப்பி வழங்கும் திட்டம் – தமிழகம் முழுவதும் விரிவாக்கம்
தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் வரும் நவம்பர் மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்கள் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைக் குறித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பிற்காக, இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு நீலகிரியில் முதன்முதலாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலின் விலையில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும்; காலி பாட்டிலை திருப்பி அளித்தால், அந்த ரூ.10 வாடிக்கையாளருக்கு மீண்டும் வழங்கப்படும்.
தற்போது பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. நவம்பருக்குள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்ய டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.450 கோடி வசூலிக்கப்பட்டு, அதில் ரூ.350 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது; மீதமுள்ள தொகை தனிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில கடைகளில் இடமின்மை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது போன்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பாட்டில்களை கைங்கரியத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தோல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.