உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு உரிமையுடன் விளக்கம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்வதில் கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என தமிழக அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குமுன் வெளியான தேர்தல் வாக்குறுதிப்படி, ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவில் தள்ளுபடிச் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளும் மீண்டும் வழங்கப்பட்டன.
மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு கடன்களில் ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் 1,01,963 குழுக்களுக்கு சேர்ந்த 10.56 லட்சம் பெண்கள் பயனடைந்தனர்.
உரிய காலத்திற்குள் பயிர் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்களாக ரூ.53,340.60 கோடி, 66.24 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கால்நடை வளர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களுக்கு ரூ.6,372.02 கோடி,
சமூக நீதியை வலுப்படுத்த 16,578 பெண்களுக்கு ரூ.470.01 கோடி,
49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடி,
4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டத்தின் கீழ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.52.34 கோடி கடன் உதவியுடன் 86 துப்புரவுப் பணியாளர்களுக்கு கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
9,132 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 3,353 பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் வர்த்தகம் ரூ.10,283.21 கோடிக்கு மேல் இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் கிடங்குகள் பெரும்பாலும் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதற்காக அரசு விருது பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்லும் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கொள்கையின் கீழ், கூட்டுறவு அமைப்புகள் திறமையாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவு பாதுகாப்பை உறுதியாக வழங்குவதோடு, மத்திய அரசின் பாராட்டுகளையும், தேசிய அளவில் விருதுகளையும் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.