“இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்” – நிக்கி ஹேலி
இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா அணுக வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதித்ததோடு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் கூடுதல் 25% வரி விதித்துள்ளார். இதனால் இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில், தெற்கு கரோலினா மாநில முன்னாள் ஆளுநரும், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் விலகியவருமான நிக்கி ஹேலி, நியூஸ் வீக் இதழில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
“சீனாவை எதிர்த்து, வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்குகள் மிக முக்கியமானவை. இந்தியாவுடனான உறவை மீண்டும் இயல்பாக்குவது அவற்றை விட குறைவான விஷயம் அல்ல. சீனாவை எதிரியாகக் கருதாமல், இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக நடத்த வேண்டும்.
ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் சீனாவுக்கு அமெரிக்கா எந்தத் தடையும் விதிக்காமல், இந்தியாவுக்கு மட்டும் வரி விதிப்பது பாரபட்சமாகும். இந்தியா–அமெரிக்கா உறவை சரிசெய்வதே வெளியுறவு கொள்கையின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
ஆசியாவில் சீன ஆதிக்கத்துக்கு எதிராக நிற்கக்கூடிய ஒரே சக்தி இந்தியாதான். அந்த நாட்டுடனான 25 ஆண்டு நெருக்கத்தை முறிப்பது உத்தி ரீதியான பேரிழப்பாகும். ஜவுளி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தித் துறைகளில் இந்தியா மிகப் பெரிய திறன் கொண்டது. சீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்க நினைத்தால், இந்தியா அமெரிக்காவுக்கு மாற்றாக அமையக்கூடிய நாடாகும்.
பாதுகாப்புத் துறையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. மேற்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவின் வர்த்தக பாதைகளில் இந்தியாவின் பங்கு – இவை அனைத்தும் இந்தியாவை சுதந்திர உலகின் மிக முக்கிய கூட்டாளியாக ஆக்குகின்றன. பாதுகாப்பிலும் பொருளாதாரத்திலும் இந்தியா, அமெரிக்காவுக்கு இன்றியமையாத சொத்தாக இருக்கிறது” என நிக்கி ஹேலி வலியுறுத்தியுள்ளார்.