எம்எல்ஏ விடுதிக்குள் நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது போலீஸ் வழக்கு!
சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதியின்றி புகுந்ததாகக் கூறி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையின் பசுமை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடந்தபோது, பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை உடைத்து விசாரணை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
அதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அமைச்சர் பெரியசாமியின் மகனும், எம்எல்ஏவுமான ஐ.பி. செந்தில் குமார் தங்கும் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த அறை பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் பல மணி நேரம் வெளியே காத்திருந்தனர்.
சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பிறகு, சட்டப்பேரவை செயலர் கி. சீனிவாசன் விடுதிக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியார். பின்னர், அவரது அறை திறக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மேலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியசாமி பயன்பாட்டில் உள்ள அறையிலும் சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியதால், அந்த அறை பூட்டப்பட்டு எவரும் உள்ளே செல்ல முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதி இல்லாமல் புகுந்ததாக குற்றம் சாட்டி, சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.