அல்காய்தாவுடன் தொடர்பு வைத்ததாக பெங்களூருவில் பெண் கைது
அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய சாமா பர்வீன் என்ற பெண், பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அல்காய்தாவின் சிந்தனையை பரப்பும் நோக்குடன், முஸ்லிம் இளைஞர்களை அரசுக்கு எதிராக வன்முறைக்குத் தூண்டி வருவதாகக் கூறி, குஜராத் மாநில தீவிரவாத ஒழிப்பு படைக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் கடந்த வாரம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஃபர்தீன் ஷேக் (24) உட்பட நால்வரை கைது செய்தனர். இவர்கள் மீது தனித் தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, நாட்டில் அல்காய்தாவுடன் தொடர்புடைய மற்ற சிலரின் விவரங்களும் வெளியாகின.
இந்தப் பின்னணியில், பெங்களூருவைச் சேர்ந்த சாமா பர்வீன் மீது சந்தேகம் எழுந்ததால், குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினர் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில், பர்வீன் அல்காய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்மீது பல்வேறு தீவிரவாதத் தடைச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.