ஹரித்வார் மானசா தேவி கோயிலில் பயங்கர நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

0

ஹரித்வார் மானசா தேவி கோயிலில் பயங்கர நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி அம்மன் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் மின்சாரம் தாக்குவதாக ஒரு செய்தி பரவியது. இதைக் கேட்ட பல பக்தர்கள் உடனடியாக கீழே இறங்க முயற்சித்தனர். அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நகர முயன்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், மீட்பு குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனர். மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டது என்பதே இந்த நெரிசலுக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேசமயம், மின்கம்பத்தில் மின்சாரம் ஒட்டியதா? அல்லது யாராவது உள்நோக்கத்துடன் தவறான தகவலை பரப்பியார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த துயரமான சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.