ஆகஸ்ட் 1 முதல் பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது: முதல்முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்கள் ₹15,000 ஊக்கத் தொகை

0

ஆகஸ்ட் 1 முதல் பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது: முதல்முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்கள் ₹15,000 ஊக்கத் தொகை பெறுவர்

‘பிரதமர் வளர்ச்சி பாதை வேலைவாய்ப்பு திட்டம் (PM-VBROY)’ என்ற பெயரில் புதிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு முன்பே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டத்தின் பயன்கள் 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரையிலான காலத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு பொருந்தும்.

₹99,446 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம், 2 ஆண்டுகளில் நாட்டில் 3.5 கோடிக்கு மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும்.

தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இந்தத் திட்டம் ஊக்குவிப்பதாக இருக்கும். இத்திட்டம் முதன்முறையாக வேலைக்கு சேர்ந்தோர் மற்றும் அவர்களை நியமிக்கும் நிறுவனங்கள் இருவருக்கும் பயனளிக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) முதன்முறையாக பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தின் அடிப்படையில் ₹15,000 ஊக்கத் தொகை, இரண்டு தவணைகளாக வழங்கப்படும். மாத சம்பளம் ₹1 லட்சம் வரை உள்ளவர்கள் இந்த உதவிக்கு தகுதியுடையவர்கள். 6 மாத வேலைக்குப் பின் முதலாவது தவணை தொகை, ஒரு ஆண்டு பூர்த்திக்குப் பின் இரண்டாவது தவணை தொகை வழங்கப்படும். இது சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் நிறுவனங்களுக்கும் ஊக்கமாக, அரசு மாதம் ₹3,000 வரை தொகையை 2 ஆண்டுகள் வரை வழங்கும். உற்பத்தித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத் தொகை 4 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

EPF-யில் பதிவு பெற்ற நிறுவனங்களில் 50 ஊழியர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் குறைந்தது 2 புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்; 50-ஐத் தாண்டும் நிறுவனங்கள் 5 புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், கூடுதலாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு சம்பளத்தின்படி ஊக்கத் தொகை அளிக்கப்படும்: ₹10,000 வரை சம்பளம் வழங்கப்படும் பணியாளர்களுக்குப் ₹1,000, ₹20,000 வரை சம்பளத்திற்கு ₹2,000 மற்றும் ₹1 லட்சம் வரை சம்பளத்திற்கு ₹3,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.