தர்பூசணி விவசாயிகளுக்கான இழப்பீடு: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0

தர்பூசணி விவசாயிகளுக்கான இழப்பீடு: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தர்பூசணி பழங்களில் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை செய்த பரப்புரை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் அம்சத்தை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தர்பூசணி பழங்களில் ஊசி மூலம் நிறம் மற்றும் சுவையை மாற்றும் வகையில் ரசாயனங்கள் ஊட்டப்படுவதாக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும், விவசாயிகள் சுமார் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, செங்கல்பட்டு விவசாய நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தோட்டக்கலைத் துறை சார்பில் வழங்கப்பட்ட விளக்கத்தில், தர்பூசணி பழங்களில் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் விசாரணைக்கு வந்த போது, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முறையற்ற வகையில் தவறான தகவலை பரப்பியதாலேயே தர்பூசணியின் விற்பனை மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், அதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவசாயிகள் அளித்த மனுவை தமிழக அரசு எட்டு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனுடன் வழக்கை நீதிமன்றம் முடித்ததாக அறிவித்தது.