நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? – பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பதவியில் உள்ள ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணம் கூறி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
தனது உடல்நிலை குறித்து கூறி பதவியைத் துறந்த ஜெகதீப் தன்கருக்கு, அவர் நலமுடன் இருக்க பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், “ஜெகதீப் தன்கர் பல பதவிகளில் நாட்டுக்காக சேவை செய்துள்ளார். அவர் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், அதற்காகவே ஜெகதீப் தன்கர் பதவி விலகியதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதைப் பற்றி பாட்ட்நாவில் பதிலளித்த மாநில அமைச்சர் நீரஜ் குமார் சிங் பப்லு, “அது நல்ல விஷயம். நிதிஷ் குமார் அந்த பதவிக்கு வந்தால் என்ன தவறு?” எனக் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “ஜெகதீப் தன்கர் ஏன் பதவி விலகினார் என்பது அவருக்கும், மத்திய அரசுக்கும் மட்டுமே தெரியும். அவர் ராஜினாமாவை ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பது அரசின் தீர்மானம்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுவுக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு ஜெகதீப் தன்கர் தலைமை வகித்தார். இதில் ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறிய கலந்துரையாடலுக்குப் பிறகு மாலை 4.30 மணிக்கு மீண்டும் கூட்டம் நடத்த முடிவானது.
ஆனால் மாலை 4.30 மணிக்கான கூட்டத்தில் நட்டா மற்றும் ரிஜிஜு பங்கேற்கவில்லை. அவர்களுக்கு அது பற்றிய தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நெகிழ்ந்த தன்கர், அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு திட்டமிடப்பட்ட கூட்டத்தை ஒத்திவைத்தார்.
இதைப் பார்த்தபோது, இந்த இருவரும் கூட்டத்தில் இருந்து விலகியது பின்னணி காரணம் கொண்டதாக தெரிகிறது. இதுவே இந்திய அரசியல் வரலாற்றில் ஒருபோதும் நிகழாத வகையில் துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வைத்தது.
அவர் கூறும் உடல்நிலை காரணம் மதிக்கத்தக்கது. ஆனால், அதற்குப் பிறகும் உள்ள காரணங்கள் நிச்சயமாக ஆழமாயுள்ளது. அவர் 2014க்குப் பிந்தைய இந்திய அரசை பொது மன்றங்களில் எப்போதும் பாராட்டினார். விவசாயிகள் நலன், நீதித்துறை சுதந்திரம் குறித்தும், செயல்முறை ஒழுங்குகள் குறித்தும் துணிந்து பேசியவர். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்திருக்கிறார். அவரது ராஜினாமா, அவரை நியமித்த அரசையே விமர்சிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்பி பகவத் கிஷண்ராவ் காரட், “தன்கர் ஏற்கெனவே எய்ம்ஸில் சிகிச்சை பெற்றவர். தற்போது உடல்நிலை காரணமாகவே பதவி விலகியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி கூறியதாவது, “ஜெகதீப் தன்கரின் நீண்ட ஆயுளுக்காக வாழ்த்துகிறேன். எனினும், அவருடைய ராஜினாமா புரியாத புதிராக உள்ளது. இது மர்மத்தைக் கிளப்புகிறது. அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதை அவர் விளக்கினால் நல்லது” என தெரிவித்தார்.