‘பிளாக்மெயில்’ படத்துக்காக ஜி.வி. பிரகாஷ் அளித்த பெரும் உதவி – தயாரிப்பாளர் பாராட்டு
மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்திருக்கும் படம் ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரியின் சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆகஸ்ட் 1-ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டில் திரைப்படத் துறையை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இசை வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா உள்ளிட்டோர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் அமல்ராஜ்,
“படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ்க்கு எனது மனமார்ந்த நன்றி. படம் முழுக்க படப்பிடிப்பு நடந்தது. ஆனால் கடைசி 8 நாட்கள் ஷூட்டிங் முடிக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவியவர் ஜி.வி. பிரகாஷ் தான்.
அவர் தனது சம்பளத்திலும் பாதி மட்டுமே எடுத்துக்கொண்டார். டப்பிங் வேலைகளையும் முடித்து, இசை வெளியீட்டுக்காகவும் பங்கேற்றுள்ளார். இது போன்ற மனப்பான்மை யாருக்கும் எளிதில் வராது. அவரிடம் என்றென்றும் நன்றி செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது,” என குறிப்பிட்டார்.
இச்சம்பவம், ஜி.வி. பிரகாஷ் தனது தொழில்முறை ஒழுக்கம் மற்றும் மனிதநேயப் பார்வையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகக் கருதப்படுகிறது.