ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி வசதியுடன் மணக்குள விநாயகர் கோயில்: நிர்வாகம் தகவல்
புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் மாற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய நகரப் பகுதியில் அமைந்துள்ள இந்த திருக்கோயில், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் தரிசிக்கின்ற முக்கிய ஆன்மிக மையங்களில் ஒன்றாகும். நாள்தோறும் உள்ளூர் பொதுமக்கள், வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கமாகும். தற்போது, கோயிலில் முழுமையான ஏசி வசதியை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
“மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தில் பக்தர்களின் சுகாதாரமும் வசதிகளும் கருத்தில் கொண்டு, அவர்கள் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, ரூ.33 லட்சம் மதிப்பில் தேவஸ்தான வளாகம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்படுகிறது. இந்தப் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படவுள்ளது.
இதற்கான செலவில், பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை தொகையும், தேவஸ்தான நிதியிலிருந்தும் ஒரு பகுதி பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், புதுச்சேரி யூகோ வங்கி, ரூ.11.90 லட்சம் மதிப்பிலான நன்கொடைச் செக்கை இன்று கோயில் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது” என நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நன்கொடை செக்கை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில், யூகோ வங்கி அதிகாரிகள் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர். இந்த நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.