மதுராந்தகத்தில் அதிமுக எம்எல்ஏ மரகதத்தின் தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கல்

0

மதுராந்தகத்தில் அதிமுக எம்எல்ஏ மரகதத்தின் தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கல்

திமுக அரசின் தோல்விகள் மற்றும் செயலிழப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், மதுராந்தகத்தில் அதிமுகவினர் வீடு தோறும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் இந்த திண்ணை பிரச்சார நிகழ்வு நடைபெற்றது. இப்பிரச்சாரத்தின் போது, வீடுகள் மற்றும் கடைகள் அருகிலும் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள், கடைகளிலும் வீதிகளிலும் பொது மக்களிடம் நேரில் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி, திமுக ஆட்சியில் நடைபெறும் ஒழுங்கற்ற செயல்கள் மற்றும் நிர்வாகக் குறைகளை வலியுறுத்தினர்.

அங்கு பேசிய எம்எல்ஏ மரகதம் கூறியதாவது:

“மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களுக்கு ரூ.1,000 வழங்குவது போலக் காட்டி, மின்விலையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட அனைத்திலும் கட்டணங்களை உயர்த்தி, மக்களின் வாழ்க்கையை சிரமமடையச் செய்துள்ளது.

இதுவே நிர்வாகத் திறனற்ற ஒரு ஆட்சியின் எடுத்துக்காட்டு. இந்த அவலங்களுக்கு பதிலடி அளிக்க, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும். அவர் தலைமையில் திமுக ஆட்சி நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும்,” என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அப்பகுதி வியாபாரிகள், விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தித்து, முந்தைய அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அதே நேரத்தில், தற்போது நடைபெறும் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.